சென்னைக்காக பல திட்டங்கள்: வரிசையாக திறப்பு விழாக்கள் காத்திருக்கின்றன – முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தலைநகர் சென்னையின் வளர்ச்சிக்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், அடுத்தடுத்து பல திட்டங்கள் திறப்பு விழாவுக்காக தயாராக உள்ளன என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலை நெம்மேலியில், ரூ.342.6 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், 1967 முதல் 2011 வரை திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன என்றார். திமுக ஆட்சியில் அணைகள் கட்டப்படவில்லை என்று கூறுவது முற்றிலும் தவறான தகவல் என்றும், கருணாநிதி ஆட்சிக் காலத்தில் நீர்நிலைகளை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
நீர் மேலாண்மை இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானதாக மாறியுள்ளதாக கூறிய முதல்வர், நிலத்தடி நீர் வளத்தை அதிகரிக்கவும், நீர்நிலைகள் மாசடையாமல் பாதுகாக்கவும் திமுக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டங்களுக்கும் அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக அவர் கூறினார்.
அதே நேரத்தில், நீர் பாதுகாப்பில் பொதுமக்களுக்கும் சமூக பொறுப்பு இருப்பதாக குறிப்பிட்ட அவர், சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் தன்னார்வ அமைப்புகளை ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
நீர்வளத்துறை, பிற துறைகளுடன் இணைந்து மாவட்டம் தோறும் கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளை சுத்தப்படுத்தி, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நீண்டகால பலன் பெறும் வகையில் நிலையான நீர் மேலாண்மையை உறுதி செய்து வருவதாகவும் முதல்வர் கூறினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், சென்னைக்காக திமுக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி இருப்பதாகவும், இனி வரும் நாட்களில் தொடர்ந்து பல திறப்பு விழாக்கள் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார். இன்று தொடங்கப்பட்ட மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டம் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறினார்.
