சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமித்து ஜனாதிபதி அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா பணியாற்றி வருகிறார். அவர் மார்ச் 5ஆம் தேதி ஓய்வு பெற உள்ளதால், அவரது பதவிக்கு அடுத்ததாக யாரை நியமிக்க வேண்டும் என்பது குறித்து உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் ஆலோசனை நடத்தியது.
அந்த ஆலோசனையில், கேரளா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது. இந்த பரிந்துரை பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
கொலீஜியம் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கும் உத்தரவை வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் விரைவில் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இந்த தர்மாதிகாரி?
சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது சட்ட வாழ்க்கையை தொடங்கியவர். சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூரை சொந்த ஊராக கொண்ட அவர், பின்னர் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.
அதன்பின்னர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கேரளா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார். தற்போது அவரை சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கும் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
