ஆமதாபாத்: இந்தியா இன்று வேகமாக வளர்ந்து வரும் நாடாக மாறியதற்கு சீர்திருத்தங்களே முக்கிய காரணம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,
“இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் பாதையில் மிக வேகமாக முன்னேறி வருகிறது. நாட்டில் பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி, சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் என்ற மந்திரத்தின் வெற்றியை வெளிப்படுத்துகிறது,” என்றார்.
மேலும்,
“விவசாய உற்பத்தியில் இந்தியா புதிய சாதனைகளை படைத்து வருகிறது. பால் உற்பத்தியில் உலகில் முதலிடத்தில் உள்ளோம். தடுப்பூசி உற்பத்தியில் இந்தியா உலகின் மிகப்பெரிய நாடாக திகழ்கிறது,” என அவர் குறிப்பிட்டார்.
கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா உலகிலேயே அதிக அளவில் மொபைல் டேட்டா பயன்படுத்தும் நாடாக மாறியுள்ளதாகவும், இன்று உலக வல்லுநர்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் இந்தியா மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
“சர்வதேச நாணய நிதியம் (IMF) இந்தியாவை உலக வளர்ச்சியின் ‘இன்ஜின்’ என்று பாராட்டியுள்ளது. எஸ் & பி நிறுவனம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் கடன் தரமதிப்பீட்டை உயர்த்தியுள்ளது. உலகளாவிய நிச்சயமற்ற சூழ்நிலையிலும் இந்தியா முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை கண்டு வருகிறது,” என்றார்.
இந்தியாவின் இந்த முன்னேற்றத்திற்கு சீர்திருத்தங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும், அதனாலேயே இந்தியா மீது உலகளாவிய நம்பிக்கை அதிகரித்து வருவதாகவும் பிரதமர் மோடி தனது உரையில் வலியுறுத்தினார்.
