புதுடில்லி: குறிப்பிட்ட சில நாடுகள் மட்டுமே உலகை ஆளும் காலம் முடிந்துவிட்டது. பல நாடுகள் அதிகார மையங்களாக உருவாகும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடைபெற்ற புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவின் செயல்பாடுகள் சர்வதேச அரங்கில் வளரும் நாடாக இந்தியாவின் தாக்கத்தை வெளிப்படுத்தியது. அந்த நேரத்தில் நாட்டின் அனைத்து மக்களுக்கும் மத்திய அரசு தடுப்பூசி வழங்கியது. அதே சமயம் பிற வளரும் நாடுகளுக்கும் தடுப்பூசிகளை அனுப்புவதற்கும் இந்தியா முன்வந்தது.
வளரும் நாடு என்பது வெறும் வார்த்தை அல்ல. அது நமக்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும் அந்த காலகட்டம் வெளிப்படுத்தியது.
முன்பு கலாசாரம், அரசியல் மற்றும் உத்திகளின் அடிப்படையில் ஒருங்கிணைந்த அமைப்பாக இருந்த வளர்ந்த நாடுகள் தற்போது தங்களுக்குள் வேறுபாடுகளை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளன.
சர்வதேச அரசியல் இனி ஒரு சில சக்திவாய்ந்த நாடுகளின் கட்டுப்பாட்டில் இல்லை. பல நாடுகள் அதிகார மையங்களாக உருவாகும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பிட்ட தேவைகள் மற்றும் விவகாரங்களுக்காக மட்டும் தற்காலிக கூட்டணிகளை நாடுகள் அமைக்கும் நிலையும் காணப்படுகிறது.
சில நாடுகள் ஒப்பந்தங்களை உருவாக்கி, மற்ற நாடுகள் அதற்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என்ற பழைய நடைமுறைக்கு உலகம் இனி திரும்பாது.
சர்வதேச ஒத்துழைப்பு என்பது தற்போதைய அதிகாரப் பரவலுக்கு ஏற்ப மாற வேண்டும். அதை எதிர்க்கக் கூடாது என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
