புதுடில்லி: நாட்டில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளை கட்டுப்படுத்தும் நோக்கில், வாட்ஸ் அப் பயன்பாட்டுக்கு ‘சிம் பைண்டிங்’ முறை கட்டாயமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
மார்ச் 1 முதல் இந்த விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. இனிமேல், எந்த மொபைல் எண்ணில் வாட்ஸ் அப் கணக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அந்த சிம்கார்டு அதே மொபைலில் செயல்பாட்டில் இருக்க வேண்டும். சிம்கார்டு அகற்றப்பட்டால் அல்லது செயல்பாட்டில் இல்லாவிட்டால், வாட்ஸ் அப் சேவை நிறுத்தப்படும்.
முன்னதாக, ஓடிபி மூலம் எண்ணை உறுதிப்படுத்திய பின், சிம்கார்டு இல்லாவிட்டாலும் வாட்ஸ் அப் இயங்கிக் கொண்டே இருந்தது. மேலும், கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் வாட்ஸ் அப் வெப் மூலம் தொடர்ந்து பயன்படுத்த முடிந்தது.
ஆனால் புதிய விதிமுறையின் படி, வாட்ஸ் அப் வெப் சேவையும் ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை தானாக லாக் அவுட் செய்யப்படும். இது பாதுகாப்பு காரணங்களுக்காக அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய சிம்கார்டுகளை பயன்படுத்தி வாட்ஸ் அப் கணக்குகளை உருவாக்கி, பின்னர் வெளிநாடுகளில் இருந்து மோசடிகள் நடத்திய சம்பவங்கள் அதிகரித்ததால், இந்த கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் குற்றவாளிகளை எளிதில் கண்டறிய முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
