சென்னை: பணி பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் வருவாய் துறை அலுவலர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல்வேறு மக்கள் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் வருவாய் துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று 10வது நாளாக போராட்டம் நடைபெற்றது.
மேலும் இரண்டாவது நாளாக, 50க்கும் மேற்பட்ட வருவாய் துறை அலுவலர்கள் சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து பின்னர் அழைத்துச் சென்றனர்.
தமிழகம் முழுவதும் வருவாய் துறையினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், வரி வசூல், ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்கள் வழங்குதல், பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாக பணிகள் நடைபெறாமல் உள்ளன. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், அரசு இந்த பிரச்சினையை கவனிக்காமல் இருப்பதாகவும், தங்களது கோரிக்கைகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கிராம உதவியாளர்கள் போராட்டம்
இதற்கிடையில், தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் கிராம உதவியாளர்களும் தங்களுக்கு நான்காம் நிலை ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என கோரி கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நேற்று சென்னை எழிலகம் வளாகத்திலிருந்து கோட்டை நோக்கி 500க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் மாலை அவர்களை விடுவித்தனர்.
பேராசிரியர்கள் போராட்டம்
பல்கலை மானியக்குழு (UGC) பரிந்துரையின் அடிப்படையில் தமிழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என 2021ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் சில பகுதிகளைச் சேர்ந்த பேராசிரியர்களுக்கு மட்டும் அந்த ஊதியம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மற்ற பகுதிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக பணி மேம்பாட்டு ஊதியம் வழங்க கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கல்லூரி வளாகங்களில் உள்ளிருப்பு போராட்டமும் நடைபெற்றது.
இந்த நிலையில், பணி மேம்பாட்டு ஊதியம் வழங்க கோரி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரி கல்வி இயக்கக வளாகத்தில் பல்கலை ஆசிரியர்கள் சங்கம் (மூட்டா) சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று தொடங்கியது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள், விவசாயிகள் அவதி
இந்த போராட்டம் குறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், வருவாய் துறையினர் வேலைநிறுத்தம் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய மாணவர்கள் ஜாதி, வருமானம் மற்றும் ஓ.பி.சி. சான்றிதழ்களை பெற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதேபோல் விவசாயிகள் நெல் விற்பனைக்காக தேவையான அடங்கல் ஆவணங்களை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசு நிர்வாகத்தின் முக்கிய அங்கமாக செயல்படும் வருவாய் துறையினர் வழங்கும் சேவைகள் பொதுமக்களுக்கு நேரடியாக தொடர்புடையவை என்பதால், அவர்களின் வேலைநிறுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்
டாஸ்மாக் பணியாளர்களும் பணிநிரந்தரம், காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் மாதம் ₹1,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது.
ஆனால் இந்த அறிவிப்பை பணியாளர்கள் போதுமானதாக கருதவில்லை. இடைக்கால நிவாரணமாக ₹5,000 ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனால் வரும் 7ஆம் தேதி முதல் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குநர் அலுவலகம் அருகில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அரசு டாக்டர்கள் போராட்டம்
இதற்கிடையில் அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பும் கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற அரசு டாக்டர்களுடன் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் செந்தில்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மருத்துவமனை வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கப்படாததால், இந்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
