ரியாத்: சவுதி அரேபியாவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான அராம்கோவில் உள்ள ராஸ் தனுரா சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் ஈரானின் ஆட்சியாளர் கமேனி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்துக்கு பின்னர் ஈரான் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி மேற்காசிய நாடுகளில் தாக்குதல்களை அதிகரித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தாலும், அதனை ஈரான் நிராகரித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக சவுதி அரேபியாவில் உள்ள அராம்கோ நிறுவனத்தின் ராஸ் தனுரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை டிரோன் மூலம் ஈரான் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் எண்ணெய் கிடங்கில் தீப்பற்றியது.
உடனடியாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமெரிக்கா–ஈரான் மோதலால் உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகம் மற்றும் பங்குச் சந்தைகள் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
இந்த சூழலில் சவுதியில் உள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தாக்கப்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் விலை மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே உருவாகியுள்ளது.
