புதுடில்லி:
நம் விமானப்படையின் குரூப் கேப்டனும், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற முதல் இந்தியராக வரலாறு படைத்தவருமான சுபான்ஷு சுக்லாக்கு, வீர தீர செயலுக்கான உயரிய அசோக சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
41 வயதான சுபான்ஷு சுக்லா, இந்திய விமானப்படையில் குரூப் கேப்டன் அந்தஸ்தில் பணியாற்றி வருகிறார். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பயிற்சியிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், நாசாவுடன் இணைந்து, இஸ்ரோவின் ஒத்துழைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆக்சியம்–4 விண்வெளி பயண திட்டத்தில் அவர் பைலட்டாக பங்கேற்றார். அந்தப் பயணத்தின் போது, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று, 18 நாட்கள் தங்கி, 60-க்கும் மேற்பட்ட அறிவியல் பரிசோதனைகளை அவர் மேற்கொண்டார்.
இந்தச் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், நேற்று திரவுபதி முர்மு முப்படைகளைச் சேர்ந்த 70 வீரர்களுக்கு வீர தீர விருதுகளை அறிவித்தார். அதில், சுபான்ஷு சுக்லாவுக்கு நாட்டின் உயரிய வீர தீர விருதான அசோக சக்ரா வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கமளித்த ராணுவ பெண் அதிகாரியான சோபியா குரேஷிக்கு, விஷிஷ்ட் சேவா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
