கோவை:
வரும் சட்டசபைத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமார் தெரிவித்தார். கோவையில் நிருபர்களை சந்தித்த அவர், திரைப்படம் உருவாக்குவது எளிதான விஷயம் அல்ல என்றும், சினிமா துறையின் சவால்கள் அதில் பணிபுரிபவர்களுக்கே புரியும் என்றும் கூறினார்.
திரைப்படங்கள் எடுக்கப்படும் போது சட்ட விதிகளுக்குள் தான் செயல்பட வேண்டும் என்றும், மத்திய சென்சார் போர்டு வெளிப்படையாக செயல்பட்டு வருவதாகவும் சரத்குமார் விளக்கினார். தாம் நடித்த ‘அடங்காதவன்’ திரைப்படம் இன்னும் வெளியாகாததை சுட்டிக்காட்டிய அவர், அதற்காக சென்சார் போர்டை குறை சொல்ல முடியாது என்றார்.
‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பாகவும் பேசினார். அந்த படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இருந்தால், அவை மறுஆய்வுக்கு உட்படுத்தப்படுவது இயல்பான நடைமுறை என்றும், இதை அரசியலோடு இணைத்து பார்க்கக் கூடாது என்றும் தெரிவித்தார். முன்னதாக ‘தக் லைப்’ திரைப்படத்துக்கும் இதுபோன்ற சிக்கல்கள் இருந்ததை அவர் நினைவுபடுத்தினார்.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலையீடு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். வரும் சட்டசபைத் தேர்தலில் தாம் போட்டியிடவில்லை என்றும், பாஜக வெற்றி பெற முழுமையாக உழைப்பேன் என்றும் சரத்குமார் தெளிவுபடுத்தினார்.
