சட்டசபை சர்ச்சை: கவர்னர் வெளியேறிய விவகாரம் குறித்து லோக் பவன் விளக்கம்
சென்னை: சட்டசபையில் பேச முயன்ற போது கவர்னரின் மைக் மீண்டும் மீண்டும் அணைக்கப்பட்டதால் பேச அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் தான் கவர்னர் அவையிலிருந்து வெளியேறினார் என லோக் பவன் (கவர்னர் மாளிகை) விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆர்.என். ரவி பேசும் நேரத்தில் அவரது மைக் தொடர்ந்து நிறுத்தப்பட்டதாகவும், அவை உரையில் பல ஆதாரமற்ற தகவல்கள் மற்றும் தவறான கூற்றுகள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும் பல முக்கிய பிரச்னைகள் உரையில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்திற்கு ரூ.12 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக கூறுவது உண்மைக்கு மாறானது என குற்றம்சாட்டியுள்ள லோக் பவன், பல முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காகித அளவிலேயே உள்ளன என்றும், நடைமுறையில் வந்த முதலீடு மிகவும் குறைவாகவே உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பெண்களின் பாதுகாப்பு குறித்து உரையில் எந்த குறிப்பும் இல்லை என்றும், போக்சோ சட்டத்தின் கீழ் பதிவான பாலியல் குற்றங்கள் 55 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளன என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெண்கள் தொந்தரவு தொடர்பான புகார்கள் 33 சதவீதத்திற்கும் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், போதைப் பொருட்கள் பரவல் மற்றும் இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரிப்பது மிகப்பெரிய சமூக சவாலாக மாறியுள்ள நிலையில், ஒரு ஆண்டில் மட்டும் போதை காரணமாக 2,000க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
மாநிலத்தில் ஆண்டுக்கு சுமார் 20,000 தற்கொலைகள் நடைபெறுகின்றன என்றும், ஒரு நாளுக்கு சராசரியாக 65 பேர் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதன் காரணமாக தமிழகம் ‘இந்தியாவின் தற்கொலை தலைநகர்’ என குறிப்பிடப்படும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தலித் மக்களுக்கும், தலித் பெண்களுக்கும் எதிரான அத்துமீறல்கள் அதிகரித்து வரும் நிலையில், அதுகுறித்த எந்த குறிப்பும் உரையில் இடம்பெறவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கல்வித் தரம் தொடர்ந்து சரிவடைந்து வருவதாகவும், 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளில் பல ஆண்டுகளாக தேர்தல்கள் நடத்தப்படாமல், அவை அரசு நியமித்த சிறப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இதனால் கோடிக்கணக்கான மக்கள் அடிப்படை ஜனநாயக உரிமைகளில் இருந்து வஞ்சிக்கப்படுகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், மாநிலத்தில் பல ஆயிரம் கோவில்கள் நிர்வாக வாரியங்கள் இன்றி அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், பழமையான கோவில்களை பாதுகாக்க மதுரை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகள் ஐந்து ஆண்டுகளாக அமல்படுத்தப்படவில்லை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) அதிக செலவுகள் காரணமாக கடும் அழுத்தத்தை எதிர்கொள்வதாகவும், வளர்ச்சி வாய்ப்புகள் இருந்தும் தமிழக தொழில் முனைவோர் பிற மாநிலங்களுக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து முக்கிய பிரச்னைகளும் அவை உரையில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதாக லோக் பவன் குற்றம்சாட்டியுள்ளது.
