இறுதி கட்டத்தில் நக்சல் ஒழிப்பு; பாதுகாப்புப் படைகளின் பெரிய முன்னேற்றம்
புவனேஸ்வர்:
நாடு முழுவதும் நக்சல் இயக்கத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முழுமையாக முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், ஒடிஷாவில் நடைபெற்ற தொடர் அதிரடி நடவடிக்கைகளில் மாவோயிஸ்ட் மத்திய கமிட்டி உறுப்பினர் கணேஷ் உய்கே உள்ளிட்ட ஆறு நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இதன் மூலம், நக்சல் ஒழிப்பு நடவடிக்கை தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி இருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எஞ்சியுள்ள ஒரே உயர்மட்ட தலைவர் தேவுஜி மற்றும் அவரது ஆதரவாளர்களை பிடிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு, “நக்சல்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், அவர்களின் செயல்பாடுகள் மார்ச் மாதத்துக்குள் முற்றாக முடிவுக்கு கொண்டு வரப்படும்” என மத்திய அரசு உறுதி அளித்திருந்தது. இதையடுத்து, ஒடிஷா, சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளூர் காவல்துறையுடன் இணைந்து பாதுகாப்புப் படைகள் ஒருங்கிணைந்த வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கு முன், சத்தீஸ்கரில் கடந்த மே மாதம் சி.பி.ஐ. மாவோயிஸ்ட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினரான பசவராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார். அதேபோல், ஆந்திராவில் நடந்த தேடுதல் நடவடிக்கையில் அந்த அமைப்பின் முக்கிய தளபதி மாத்வி ஹித்மா, அவரது மனைவி உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர்.
இந்த சூழலில், ஒடிஷாவின் காந்தமால் – கஞ்சம் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சிறப்பு அதிரடி படை, துணை ராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
பெல்கா பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடந்த மோதலில் இரு நக்சல்கள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து சகாபத் பகுதியில் நேற்று அதிகாலை மீண்டும் நடந்த துப்பாக்கிச் சண்டையில், இரு பெண்கள் உட்பட நான்கு நக்சல்கள் உயிரிழந்தனர்.
இதுகுறித்து ஒடிஷா கூடுதல் காவல் துறை டிஜிபி சஞ்சீவ் பாண்டா கூறுகையில், கும்மா காட்டுப் பகுதியில் நடந்த சண்டையில் உயிரிழந்த இருவரின் தலைக்கும் தலா 23.65 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார். சகாபத் பகுதியில் கொல்லப்பட்டவர்களில், சி.பி.ஐ. மாவோயிஸ்ட் அமைப்பின் மத்திய கமிட்டி உறுப்பினர் கணேஷ் உய்கே (69) இடம்பெற்றுள்ளதாகவும், அவரது தலைக்கு 1.1 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் கூறினார்.
தெலுங்கானாவின் புல்லேமாலா கிராமத்தைச் சேர்ந்த கணேஷ், கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்தவர். அவர் கொல்லப்பட்டிருப்பது, நக்சல் ஒழிப்பு நடவடிக்கையில் மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
உயிரிழந்த பிற நக்சல்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேடுதல் நடவடிக்கைகள் தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நக்சல் இயக்கத்தின் உயர்மட்ட தலைவர்கள் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்பட்டு வரும் நிலையில், சத்தீஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பல நக்சல்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்து வருகின்றனர். இதனால், நக்சல் ஒழிப்பு நடவடிக்கை முடிவுத் தளத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், சி.பி.ஐ. மாவோயிஸ்ட் அமைப்பின் பொதுச்செயலராக உள்ள தேவுஜி மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்கும் முயற்சிகள் தெலுங்கானா, சத்தீஸ்கர், ஒடிஷா, ஜார்க்கண்ட் மாநில வனப்பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உடல்நலக் குறைவால் நடக்க முடியாத நிலையில் உள்ள தேவுஜி, ஆதரவாளர்களின் உதவியுடன் பதுங்கியிருப்பதாகவும், அவரை விரைவில் கைது செய்வோம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
மாவோயிஸ்ட் தளபதி கணேஷ் உய்கே என்கவுன்டரில் உயிரிழந்தது, நக்சல் ஒழிப்பு நடவடிக்கையில் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதன் மூலம், ஒடிஷா நக்சல்கள் இல்லாத மாநிலமாக மாறும் நிலையை எட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
