கோவில் மேம்பாட்டுக்கு வாக்குறுதியான ₹1000 கோடி எங்கே? – திமுக அரசை கேள்வி எழுப்பும் ஹிந்து முன்னணி
திருப்பூர்:
திமுக தேர்தல் அறிக்கையில் கோவில்களின் மேம்பாட்டுக்காக ஆயிரம் கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கப்படும் என அறிவித்த நிலையில், ஆட்சிக் காலம் முடிவுக்கு வருகிற இந்த நேரத்தில் அந்த வாக்குறுதி எவ்வளவு நிறைவேற்றப்பட்டது என ஹிந்து முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ஆயிரக்கணக்கான கும்பாபிஷேகங்கள் நடைபெற்றதாக முதல்வர் சட்டசபையில் பெருமையாக கூறியிருந்ததை சுட்டிக்காட்டி, அவை அனைத்தும் பக்தர்களின் காணிக்கையால் நடந்தவை என்றும், அதற்கு அரசே பெருமை பேசுவது ஏமாற்று வேலை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் நடைபெறும் திருப்பணிகளுக்கும், கும்பாபிஷேகங்களுக்கும் அரசு நேரடியாக நிதி வழங்குவதில்லை என்றும், அனைத்தும் பக்தர்களின் காணிக்கையிலேயே நடைபெறுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் பல கோவில்களில் திருப்பணிகள் தடைபட்ட நிலையில், அதன் பின்னர் தொடர்ச்சியாக நடந்த கும்பாபிஷேகங்களை அரசு சாதனையாகக் காட்டுவது தவறானது என்றும் கூறியுள்ளார்.
மேலும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதால் பல கோவில்களில் திருப்பணிகள் கூட நடைபெறவில்லை என்றும், அந்த துறையில் ஊழல் அதிகரித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி கோவில் மேம்பாட்டுக்காக அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியது என்பதை விளக்க வேண்டும் என்றும், வரும் காலங்களில் ஹிந்துக்கள் திமுக அரசின் மதவாத அரசியலுக்கும் ஹிந்து விரோத செயல்களுக்கும் உரிய பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
