மதுரை: கரூர் மாவட்டத்தில் உள்ள வெண்ணெய்மலை பாலசுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவகாரத்தில், “ஏழை கடவுளுக்கு ஓட்டுரிமை இல்லை; ஆனால் வலிமை மிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு மதிப்புமிக்க ஓட்டுரிமை உள்ளது” என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கடுமையான கருத்தை தெரிவித்துள்ளது. மேலும் கோவில் நிலம் தொடர்பான வழக்குகளை சிவில் நீதிமன்றங்கள் முன்னுரிமை அடிப்படையில் ஆறு மாதங்களுக்குள் தீர்க்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை சேர்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், கரூர் மாவட்டம் வெண்ணெய்மலையில் உள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான காதப்பாறை மற்றும் ஆத்தூர் பகுதிகளில் உள்ள சுமார் 500 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது. இந்த நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் முன்பே உத்தரவிட்டிருந்தும், அதை நிறைவேற்றாததால் அறநிலையத்துறை கமிஷனர், கரூர் மாவட்ட கலெக்டர் மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் கோரினார்.
இந்த மனுவை நீதிபதிகள் பி. வேல்முருகன் மற்றும் பி. புகழேந்தி அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, கோயில் நிலம் தொடர்பாக பல்வேறு சிவில் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அவற்றில் 40 வழக்குகளில் மட்டுமே இடைக்காலத் தடை உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. பெரும்பாலான வழக்குகளில் தடை உத்தரவு இல்லாதபோதும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது குறித்து நீதிமன்றம் கவலை தெரிவித்தது.
கோயிலுக்கு சொந்தமான மொத்த நிலப்பரப்பு 507.88 ஏக்கர் எனவும், அதில் தற்போது வரை 93.64 ஏக்கர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2025ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுத்தபோதும், சில அரசியல் தலைவர்கள் மற்றும் அமைப்புகள் நடத்திய போராட்டங்களால் அந்த நடவடிக்கை முழுமையாக செயல்படுத்தப்படவில்லை எனவும் கூறப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்களில் 27 பேர் அரசு அதிகாரிகள், 49 பேர் தொழிலதிபர்கள் மற்றும் 38 பேர் செல்வாக்கு மிக்க நபர்கள் எனவும் தகவல் வெளியாகியது.
இதுகுறித்து நீதிமன்றம் கூறுகையில், சமூக மற்றும் அரசியல் செல்வாக்கு காரணமாக நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த அதிகாரிகள் தயங்கியிருக்கலாம் என்ற கவலைக்கிடமான நிலையை புறக்கணிக்க முடியாது என்று தெரிவித்தது.
மேலும் “ஏழை கடவுளுக்கு ஓட்டுரிமை இல்லை; ஆனால் வலிமை மிக்க ஆக்கிரமிப்பாளர்களிடம் மதிப்புமிக்க ஓட்டுரிமை உள்ளது. ஜனநாயக அரசியல் அமைப்பில் தேர்தல் கணிதம் நிர்வாக முடிவுகளில் செல்வாக்கு செலுத்தும் போல் தோன்றலாம். ஆனால் அரசியலமைப்பின் அடிப்படையில் இயங்கும் ஆட்சி தேர்தல் அரசியலுக்கு உட்பட்டது அல்ல” என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
கடவுள் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பதற்காக அவருக்கு உரிய பாதுகாப்பு மறுக்கப்பட முடியாது என்றும், கடவுள் ஓட்டு பதிவு செய்யாமல் இருக்கலாம்; ஆனால் அரசியலமைப்பு பேசுகிறது என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
அதே நேரத்தில் சில அமைப்புகள் இந்த நடவடிக்கைக்கு எதிராக போராட்டங்களை ஏற்பாடு செய்ததாகவும், அவற்றில் சட்டத்துறையினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றது வருத்தத்திற்குரியதாகும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
இந்த வழக்கை முடித்து வைக்கும் போது நீதிமன்றம் பல வழிகாட்டுதல்களையும் வழங்கியது. அதன்படி கோவில் நிலம் தொடர்பான வழக்குகளை சிவில் நீதிமன்றங்கள் முன்னுரிமை அடிப்படையில் ஆறு மாதங்களுக்குள் தீர்க்க வேண்டும். மேலும் மீட்கப்பட்ட நிலம், தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறநிலையத்துறை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அதோடு ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தேவையான பாதுகாப்பு வழங்க கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும் கோவில் நிலத்தை மீட்கும் நடவடிக்கைக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்ட அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து சங்கங்களின் பதிவாளர் விசாரணை நடத்தி, சட்டவிரோத செயல்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவது விருப்பமான விஷயம் அல்ல என்றும், அரசியலமைப்பிற்கு உண்மையுடன் மாநில அரசு நிர்வாகம் செயல்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.
