தஞ்சாவூர்: மதுக்கூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் திமுக கட்சி அலுவலகம் அமைக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வடக்கு பகுதியில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் திமுக மதுக்கூர் வடக்கு கிளை அலுவலகம் பிப்., 11ம் தேதி திறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்சி தலைவர்களின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கட்சி அலுவலகம் மற்றும் சிலைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹிந்து முன்னணி தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலர் ராஜ்குமார், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு மனு அனுப்பியுள்ளார்.
இது குறித்து ராஜ்குமார் கூறுகையில், கோவில் சொத்தில் கட்சி அலுவலகம் அமைப்பது சட்டத்திற்கு முரணானது. அறநிலையத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை உடனடியாக விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் நீதிமன்றத்தை நாடுவேன் என்றார்.
இது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் விளக்கமளிக்கையில், சம்பந்தப்பட்ட இடம் குறித்து அளவீடு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. கோவில் நிலம் தனிநபர் மூலம் கட்சி அலுவலகமாக மாற்றப்பட்டதா அல்லது வாடகைக்கு விடப்பட்டதா என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்படுகிறது என தெரிவித்தனர்.
சர்ச்சை எழுந்த நிலையில், கட்சி நிகழ்ச்சிகள் அமைதியாக நடைபெற்றதாகவும், அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பு குறித்த திட்டங்களில் மாற்றம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
