சென்னை: மகளிர் உரிமைத் தொகை மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு போன்ற திட்டங்கள் வாயிலாக, தினசரி ரூ.20 கொடுத்து, தி.மு.க. அரசு ரூ.150 எடுத்துள்ளது என தமிழக பா.ஜ. முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னை, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் பா.ஜ. சார்பில் நடைபெற்ற ‘நாளை நமதே, தமிழ்நாடும் நமதே’ தெருமுனை பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது: சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி பெயரளவில் மட்டுமே வி.ஐ.பி. தொகுதியாக உள்ளது. துணை முதல்வர் உதயநிதி தொகுதியாக இருந்தாலும், அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படவில்லை என விமர்சித்தார்.
சென்னை தி.மு.க.வின் கோட்டை என்ற எண்ணத்தில் அவர்கள் செயல்படுகின்றனர். வரும் சட்டசபை தேர்தலில் சென்னை மக்கள் தி.மு.க.வுக்கு பதிலடி கொடுப்பர் என்றார்.
கடந்த 2021 முதல் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகவும், 2023க்கு பின் மத்திய அரசின் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்திற்கு மாநிலம் முழுமையான தகவல்கள் அனுப்பப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மாநில கடன் உயர்வை சுட்டிக்காட்டிய அவர், 2021ல் 4.50 லட்சம் கோடியாக இருந்த கடன் தற்போது 10.62 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்றார். மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் மூலம் பெண்களுக்கு தலா ரூ.37,000 வழங்கப்பட்டதாகவும், அதை கணக்கிட்டால் ஒரு நாளுக்கு ரூ.20 ஆகும் என்றும் கூறினார்.
ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.4.82 லட்சம் கடன் இருப்பதாக குறிப்பிட்ட அவர், “கொடுத்தது ரூ.20; எடுத்தது ரூ.150. எனவே தி.மு.க.வை பெண்கள் மன்னிக்கவே கூடாது” என்றார்.
