சென்னை: கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி யிடம், தொகுதி தொடர்பான பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்ப வந்த நபர் மீது காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு, தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்றை அண்ணாமலை தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ஒரு குடிமகன் தனது நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேள்வி எழுப்புவது ஜனநாயக உரிமை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பும் மக்களை மிரட்டுவதும், தள்ளிவிட்டு தாக்குவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்க முடியாத நிலையில்தான் இத்தகைய மிரட்டல் போக்கு வெளிப்படுகிறது என்றும் அவர் சாடியுள்ளார்.
மேலும், இந்த விவகாரம் கரூர் எம்.பி ஒருவருக்கு மட்டுமே பொருந்தாது என்றும், கடந்த பல ஆண்டுகளாக மக்களிடமிருந்து விலகி இருப்பதாக கூறப்படும் இண்டி கூட்டணி எம்.பிக்கள் அனைவருக்கும் பொருந்தும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், மிரட்டல் மற்றும் உருட்டல் அரசியலை கையாண்டால், அது தங்களின் தோல்வியை தாங்களே ஒப்புக்கொள்வதற்குச் சமம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
