கோவை: ஒரு குடும்பத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்குவது தவறானது அல்ல; அது மக்களுக்கு உதவியாக இருக்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை நேரு நகரில் நடைபெற்ற தெருமுனை பொதுக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலம் முழுவதும் பா.ஜ. 10,300-க்கும் மேற்பட்ட இடங்களில் பிரசார கூட்டங்களை நடத்தியுள்ளதாகவும், 20,000 இடங்களை எட்ட இலக்கு வைத்துள்ளதாகவும் கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒற்றுமை அவசியம் என்றும், தி.மு.க. அரசின் குறைகளை மக்களிடம் எடுத்துரைப்பதே நோக்கம் என்றும் தெரிவித்தார்.
மின்சார கட்டணம், சொத்துவரி, தண்ணீர் வரி ஆகியவை அதிகரித்ததால் மக்கள் சிரமத்தில் உள்ளதாக குற்றம்சாட்டினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் பெரும் துன்பத்தை அனுபவித்துள்ளதாகவும், பெண்கள் இந்த உதவிக்கு மதிப்பளிப்பார்கள் என்றும் கூறினார்.
மாநில அரசின் வருவாய் மற்றும் பற்றாக்குறை குறித்து பேசுகையில், நடப்பு நிதி ஆண்டில் எதிர்பார்த்த வருவாயில் குறைவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். கனிம வளங்கள் சட்டவிரோதமாக சுரண்டப்படுகின்றன என்றும், கடன் சுமையை குறைக்கும் முயற்சிகள் அவசியம் என்றும் தெரிவித்தார்.
