மதுரை: தமிழகத்தில் நடைபெறும் குடும்ப ஆட்சியை மக்கள் அகற்ற வேண்டும் என்று பா.ஜ. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் அவர் பேசிய போது, இந்த கூட்டம் தமிழக அரசியலில் திருப்புமுனையாக அமையும் என்றும், தி.மு.க. ஆட்சியை மக்கள் நிராகரிக்கும் தருணம் இது என்றும் தெரிவித்தார்.
ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இணக்கமாக செயல்படுவது முக்கியம் என கூறிய அவர், மத்தியிலும் பா.ஜ. மற்றும் மாநிலத்தில் அ.தி.மு.க. ஆட்சி இருந்த காலத்தில் தமிழகத்திற்கு 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டதை எடுத்துக்காட்டாக குறிப்பிட்டார்.
தி.மு.க. ஆட்சியில் வளர்ச்சி ஏற்பட்டதாக கூறப்பட்டாலும், அது மத்திய அரசின் பல திட்டங்களின் ஆதரவால் தான் ஏற்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். மின்னணு மற்றும் வாகனத் துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் மத்திய அரசின் ஊக்குவிப்பு திட்டங்களின் விளைவு என்றும் கூறினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் பொதுமக்கள் அல்ல, ஒரு குடும்பம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார். அரசை ஒரு நிறுவனமாக ஒப்பிட்டு, அதில் முதல்வர் நிர்வாக இயக்குநராகவும், துணை முதல்வர் தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்படுகின்றனர் என விமர்சித்தார்.
மேலும், கிழக்கு இந்திய கம்பெனி இந்தியாவில் ஆட்சி செய்ததைப் போலவே தற்போது தி.மு.க. ஆட்சி செயல்படுகிறது என்றும் கூறினார்.
ஒரு தேர்வை கூட முறையாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இந்த குடும்ப ஆட்சியை அகற்றி, மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படும் ஆட்சி உருவாக வேண்டும் என்றும், அதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
