குடியரசு தின அணிவகுப்பு: சிஆர்பிஎப் ஆண்கள் படையை பெண் அதிகாரி தலைமையேற்பது முதல் முறை
புதுடில்லி: வரும் குடியரசு தின அணிவகுப்பில், சிஆர்பிஎப் ஆண்கள் படைப்பிரிவை 26 வயதான இளம்பெண் அதிகாரி சிம்ரன் பாலா தலைமையேற்று வழிநடத்த உள்ளார். ஆண்கள் படைப்பிரிவுக்கு பெண் அதிகாரி ஒருவர் தலைமை தாங்குவது இதுவே முதல் முறையாகும்.
நாடு முழுவதும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், டில்லியின் கர்தவ்ய பாதையில் ராணுவ வலிமை, கலாசாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற உள்ளது. இந்த அணிவகுப்பில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) ஆண்கள் படைப்பிரிவின் அணிவகுப்பும் முக்கிய இடம் பெறுகிறது.
140-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த படைப்பிரிவை, 26 வயதான சிம்ரன் பாலா வழிநடத்த உள்ளார். குடியரசு தின அணிவகுப்பில் ஆண்கள் பிரிவுக்கு பெண் அதிகாரி தலைமை வகிப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக கருதப்படுகிறது. அவரது இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
யார் இந்த சிம்ரன் பாலா?
சிம்ரன் பாலா, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தை சேர்ந்தவர். அர்ப்பணிப்பு மற்றும் துடிப்பான பணிக்காக பெயர் பெற்றவர் ஆவார். ரஜோரி மாவட்டத்தில் இருந்து சிஆர்பிஎப் அமைப்பில் அதிகாரியாக சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையும் அவருக்கே உரியது.
ஜம்முவில் உள்ள காந்திநகர் பெண்கள் கல்லூரியில் அரசியல் அறிவியல் பிரிவில் பட்டம் பெற்றுள்ள சிம்ரன் பாலா, 2025-ஆம் ஆண்டு சிஆர்பிஎப்பில் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். பணியில் சேர்ந்ததுடன், முதற்கட்டமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டார்.
பயிற்சி காலத்திலேயே அவரது செயல்திறன் மற்றும் தலைமைத் திறனை பாராட்டி, சிறந்த அதிகாரி எனும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில், குடியரசு தின அணிவகுப்பில் ஆண்கள் படைப்பிரிவை வழிநடத்தும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டிருப்பது, பெண்கள் அதிகாரிகளுக்கான முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
