புதுடில்லி: இந்தியாவில் காஸ் உற்பத்தி கடந்த சில நாட்களில் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் காஸ் சிலிண்டர் விநியோக பிரச்னை தொடர்பாக உணவக சங்கங்களுடன் ஆலோசனை நடத்த மூன்று பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் பல்வேறு நாடுகளில் காணப்படுகிறது. காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் சூழலில் பதுக்கலை தடுக்க மத்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், காஸ் சிலிண்டர் விநியோகம் தொடர்பாக உணவக சங்கங்களுடன் விரைவில் எண்ணெய் நிறுவனங்கள் ஆலோசனை நடத்த உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
உணவகங்களின் பிரச்னைகளை கேட்க ஐஓசி, எச்பிசிஎல் மற்றும் பிபிசிஎல் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் அடங்கிய மூன்று பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
வணிக ரீதியிலான காஸ் சிலிண்டர் தொடர்பான உண்மையான பிரச்னைகளை கண்டறிந்து தீர்வு காணும் வகையில் இந்த குழு செயல்படும். தேவைக்கேற்ப காஸ் விநியோகத்தை சீரமைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
கடந்த சில நாட்களில் காஸ் உற்பத்தி 10 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. எல்பிஜி மற்றும் எல்என்ஜி பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. மேலும் விரைவில் புதிய நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்பு சில பிரச்னைகள் இருந்தாலும் தற்போது பெட்ரோலிய பொருட்கள் விநியோகத்தில் பெரிய சிக்கல் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேல் – ஈரான் மோதலுக்கு முன்பே இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் முழு அளவில் செயல்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஹார்முஸ் நீரிணைக்கு வெளியே இருந்து இந்தியா சுமார் 70 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த இடையூறுகளை சமாளிக்க இந்தியா ஏற்கனவே தயாராக இருப்பதாகவும், இந்த பிரச்னை முடிந்ததும் மற்ற நாடுகளை விட இந்தியா விரைவாக மீண்டு வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
