மதுரை: காங்கிரஸ் தி.மு.க.வுடன் தொடருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது என தமிழக பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நிருபர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணி தலைமையிலான ஆட்சி அமைக்கும். சென்னை மதுராந்தகத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. அந்த கூட்டம் பெரிய மாநாடாக மாறி, தி.மு.க. ஆட்சிக்கு பேரிடியாக அமைந்துள்ளது. மார்ச் 1ஆம் தேதி மதுரையில் மீண்டும் பொதுக்கூட்டம் நடைபெறும். இதில் பிரதமர் மோடி மற்றும் தேஜ கூட்டணியின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.
எங்கள் அண்ணன் இபிஎஸ் மற்றும் கூட்டணி கட்சிகளால் பா.ஜ. பலமாக உள்ளது. இபிஎஸ் தலைமையில் நல்லாட்சி மலரும். தி.மு.க. கூட்டணி வலுவாக இல்லை. தி.மு.க. ஆட்சி முற்றுபெறவில்லை. தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஒரு டிஜிபியை கூட நியமனம் செய்யப்படவில்லை. இந்த அரசு சட்டம் ஒழுங்கை எப்படி பாதுகாக்கும்? 33 லாக் அப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்க வரும் பெண்கள் ஜாதி ரீதியாக திட்டப்படுகின்றனர். ஒரு போலீஸ்காரர் பெண் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுகிறார். காங்கிரஸ் தி.மு.க.வுடன் இருக்குமா என்பது கேள்விக்குறி. யாருடைய மனமும் புண்படக்கூடாது என்பது எனது எண்ணம். விஜய்க்கு கொள்கை இருக்கிறதா? பேப்பரில் மட்டும் எழுதி வைத்தால் போதுமா? விஜய் பங்கேற்கும் கூட்டங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. கரூரில் 41 பேர் உயிரிழந்தனர். சேலத்திலும் ஒருவர் பலியாகியுள்ளார். அவர்களுக்கு நல்ல சகுனம் தான். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
