காங்கிரஸை நேரடியாக சாடிய திமுக கோ.தளபதி: இண்டியா கூட்டணி விவகாரத்தில் வெடித்த சர்ச்சை
மதுரை:
“நாம் இல்லாவிட்டால் இண்டியா கூட்டணியே உருவாகியிருக்காது” என திமுக மாநகர மாவட்டச் செயலாளர் கோ.தளபதி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில், திமுக மாணவர் அணி சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். இக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார்.
இண்டியா கூட்டணி குறித்த உரை
தன் உரையில் கோ.தளபதி, “டெல்லியில் இண்டியா கூட்டணி பேசப்படுகிறதென்றால் அதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகிய மூவர்தான் முக்கிய காரணம்” என தெரிவித்தார்.
காங்கிரஸ் மீது நேரடி தாக்கு
காங்கிரஸ் கட்சியை குறிப்பிட்டு, “சிலர் எம்பியாகிவிட்ட பின்பு, ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என தொடர்ந்து பேசுகின்றனர். மாணிக்கம் தாகூர், ஜோதி மணி போன்றோர், சட்டசபையில் யார் எம்எல்ஏ ஆனால் என்ன என்ற மனநிலையில் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு அடுத்த தேர்தலில் சீட் கூட வழங்கக் கூடாது என்பதை கட்சி தலைமை புரிந்து கொள்ள வேண்டும்” என கடுமையாக சாடினார்.
கூட்டணி அரசியல் & திருப்பரங்குன்றம் விவகாரம்
மேலும், திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை அரசியலாக்கி வாக்கு பெற பாஜக முயற்சிக்கிறது என்றும், முதல்வர் ஸ்டாலின் மட்டுமே எந்த அழுத்தத்திற்கும் அஞ்சாமல், ஒரே நிலைப்பாட்டுடன் தமிழ் மொழி மற்றும் தமிழக நலனுக்காக செயல்படுகிறார் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.
இறுதி எச்சரிக்கை
“வார்டுகளில் பூத் கமிட்டி அமைக்க ஆள் இல்லாத கட்சி, இவ்வளவு பெரிய கோரிக்கைகள் வைப்பது வேதனை அளிக்கிறது. நாம் உணர்வோடு இண்டியா கூட்டணியில் இருக்கிறோம். ஆனால், நாம் இல்லையென்றால் அந்த கூட்டணியே இல்லை” என கூறி தனது உரையை முடித்தார்.
