சிதம்பரம்: சிதம்பரம் **அண்ணாமலை பல்கலை**யில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், கவர்னர் **ஆர்.என். ரவி**யிடம் பட்டம் பெற்ற மாணவர் ஒருவர், அதில் மு.க. ஸ்டாலின் படத்தை வைத்து வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள அண்ணாமலை பல்கலையில், 87வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. பல்கலை வேந்தரும் தமிழக கவர்னருமான ரவி இதில் பங்கேற்று, 1,015 மாணவ-மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். மேலும், பல்வேறு பாடப்பிரிவுகளில் முதன்மையாக தேர்ச்சி பெற்ற 45 மாணவ-மாணவியருக்கு, அறக்கட்டளைகள் சார்பில் தங்கப்பதக்கங்களும் வழங்கப்பட்டன.
இந்த விழாவின் போது, புஷ்பராஜ் என்ற மாணவர் பட்டம் பெற வந்தபோது, திடீரென தனது சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த முதல்வர் ஸ்டாலின் படத்தை எடுத்து, பெற்ற பட்டத்தின் மீது வைத்து வாங்கி சென்றார். இதனால் விழா அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பின்னர் பட்டம் பெற வந்த மாணவர்களை பல்கலை நிர்வாகம் உரிய சோதனைகளுக்குப் பிறகே மேடைக்கு அனுப்பியது.
பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் செழியன் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் விழாவை புறக்கணித்தார்.
இதற்கு முன்பாக, திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலையில், கவர்னர் ரவியிடம் பட்டம் பெற மறுத்து, துணைவேந்தரிடமிருந்து மாணவி ஒருவர் பட்டம் பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த சம்பவம் தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
