மறைந்த வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா அவர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்க, மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் டாக்கா நகரத்துக்கு சென்றுள்ளார்.
வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரும், கொல்லப்பட்ட அதிபர் ஜியாவுர் ரஹ்மானின் மனைவியுமான கலீதா ஜியா, உடல் நலக் குறைவால் கடந்த செவ்வாய்க்கிழமை (டிச. 30) காலை காலமானார். அவரது மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தலைநகர் டாக்காவில் இன்று (டிச. 31) நடைபெற்ற கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அந்த நிகழ்வில், இந்திய அரசின் சார்பில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
மேலும், வங்கதேச முன்னாள் பிரதமரின் மறைவுக்கு பிரதமர் மோடி அனுப்பிய இரங்கல் கடிதத்தை, கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மானிடம் அமைச்சர் ஜெய்சங்கர் ஒப்படைத்ததாக, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் தளப் பதிவில், கலீதா ஜியாவின் மறைவுக்கு மத்திய அரசு மற்றும் இந்திய மக்களின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
