சென்னை: கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
கரூரில் தவெக கட்சியின் பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை தற்போது மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் ஜனவரி 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடிகர் விஜய் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியிருந்தார். தற்போது மீண்டும் மார்ச் 10ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் அதே வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டதாவது: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அந்த சம்மன் அவருக்கோ அல்லது அவரது வீட்டிற்கோ அல்லது அவரது அலுவலக பிரதிநிதிக்கோ கிடைக்கவில்லை. அந்த சம்மன் அவரது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு செந்தில் பாலாஜி இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கு விசாரணை தொடர்பாக நடிகர் விஜய் சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியதாகவும் ஏஎன்ஐ தெரிவித்துள்ளது. அதில் விசாரணைக்கு ஆஜராக 15 நாட்கள் அவகாசம் கோரியதுடன், சென்னையில் அல்லது அதற்கு அருகில் வேறு எங்காவது விசாரணை நடத்த முடியுமா எனவும் கேட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த இரண்டு கோரிக்கைகளையும் சிபிஐ பரிசீலித்து வருவதாகவும், ஆனால் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், விரைவில் விஜய்க்கு புதிய சம்மன் அனுப்பப்படும் என்றும் ஏஎன்ஐ செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
