முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்து எக்ஸ் வலைதளத்தில் தமிழில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், ஜெயலலிதாவை “மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகி” என குறிப்பிடும் பிரதமர், கருணை மற்றும் உறுதி ஆகிய பண்புகளின் ஒருங்கிணைப்பாக அவர் திகழ்ந்தார் என புகழ்ந்தார். அவரது வாழ்க்கைப் பயணம் மன உறுதியும் தீர்மானமும் கொண்டதாக இருந்தது என்றும் தெரிவித்தார்.
தமிழக முதல்வராக இருந்த காலத்தில், பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நலத்திட்டங்கள் ஆகியவற்றில் வலுவான நோக்கத்துடன் செயல்பட்ட சிறந்த ஆட்சியாளராக ஜெயலலிதா விளங்கினார் என பிரதமர் குறிப்பிட்டார்.
மேலும், அவருடனான தனது கலந்துரையாடல்களை மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்த பிரதமர், இந்த மாத ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் அவர் குறித்து பேசிய உரையின் தொகுப்பையும் இணைத்து வெளியிட்டுள்ளார்.
