கனடா பிரிவினைவாத அமைப்பு–அமெரிக்க சந்திப்பு: இறையாண்மையை மதிக்க வேண்டும் – பிரதமர் கார்னி
ஒட்டாவா: கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தை தனி நாடாக மாற்றக் கோரும் பிரிவினைவாத அமைப்பினரை அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரிகள் சந்தித்ததாக தகவல்கள் வெளியான நிலையில், கனடாவின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என பிரதமர் மார்க் கார்னி அமெரிக்காவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஆல்பர்ட்டா மாகாணத்தை கனடாவிலிருந்து பிரிக்கக் கோரும் ‘ஆல்பர்ட்டா பிராஸ்பரிட்டி புராஜெக்ட்’ (APP) அமைப்பின் தலைவர்களை கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இதுவரை மூன்று முறை அமெரிக்காவுக்கு அழைத்து, அந்நாட்டு வெளியுறவு துறை அதிகாரிகள் சந்தித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு கனடா பிரதமர் மட்டுமல்லாமல், பல மாகாண முதல்வர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து பிரதமர் மார்க் கார்னி பேசுகையில், கனடாவின் இறையாண்மையை அனைவரும் மதிக்க வேண்டும் என்பது தனது நிலைப்பாடு என்றும், இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடமும் நேரடியாக தெரிவித்ததாக கூறினார். ஆல்பர்ட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித், ஆல்பர்ட்டா கனடாவுக்குள் தன்னாட்சியுடன் செயல்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும், கருத்துக் கணிப்பில் வெளிநாட்டு தலையீடு ஏற்பட்டால் அதனை அமெரிக்காவின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்க வெளியுறவு துறை விளக்கம் அளித்து, சிவில் சமூக அமைப்புகளை சந்திப்பது வழக்கமான நடைமுறை என்றும், அந்த அமைப்புகளுக்கு எந்தவித உறுதிமொழியும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. வெனிசுலா மற்றும் கிரீன்லாந்து விவகாரங்களைத் தொடர்ந்து, கனடாவின் உள்விவகாரங்களிலும் அமெரிக்கா தலையிடுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆல்பர்ட்டா மாகாணம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை பெரிதும் நம்பி இயங்குகிறது. மத்திய அரசின் கார்பன் வரி, சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகள் மற்றும் எரிசக்தி குழாய் திட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் காரணமாக, அந்த மாகாணத்தின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதிக வரி செலுத்தியும், அதற்கேற்ற பலன் கிடைப்பதில்லை என்ற அதிருப்தி காரணமாகவே, தனி நாடு கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
கனடா அரசியலமைப்பில் நேரடியாக பிரிவு விதி இல்லாவிட்டாலும், ‘கிளாரிட்டி ஆக்ட்’ சட்டத்தின் அடிப்படையில், பொது ஓட்டெடுப்பு மூலம் பிரிவை தீர்மானிக்கலாம். அதற்கு, முதலில் 10 சதவீத மக்கள் ஆதரவு கையெழுத்தும், பின்னர் நடைபெறும் ஓட்டெடுப்பில் 55 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆதரவும் தேவைப்படும்.
