கஞ்சா புழக்கம் இல்லை என கூறுவது பொதுமக்களுக்கு செய்யும் துரோகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
சென்னை: தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் திமுக அரசு தோல்வியடைந்துள்ளதாகவும், அதனை மறைக்க முயற்சி செய்து வருவதாகவும் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், தமிழகத்தில் எங்கும் கஞ்சா நடமாட்டமே இல்லை என திமுக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் நடத்தும் நடைபயிற்சி ஷூட்டிங்கிற்கான ஏற்பாடுகளில் அமைச்சர் முழு நேரத்தையும் செலவிடுவதால், மாநிலத்தின் உண்மை நிலை அவருக்கு தெரியாமல் இருக்கலாம் என்றும் விமர்சித்துள்ளார்.
திருத்தணியில் 17 வயது சிறுவர்கள் கஞ்சா போதையில் ஒரு வடமாநில இளைஞரை அரிவாளால் வெட்டிய காணொளி வெளியாகி உள்ள நிலையில், அதையும் பொய் என அமைச்சர் மறுப்பாரா என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை, கடத்தல் மற்றும் வைத்திருப்பு தொடர்பான வழக்குகள் தொடர்ந்து பதிவாகி வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்த ஆண்டில் மட்டும் தூத்துக்குடியில் திமுக கவுன்சிலரின் மகன் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டதும், சென்னை ஆவடி பகுதியில் ஆயிரக்கணக்கான கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதும், ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு பலர் கைது செய்யப்பட்டதும், நீதிமன்றங்களே சிறைத் தண்டனை விதித்துள்ளதும் நாள்தோறும் வெளியாகும் செய்திகள் என தெரிவித்துள்ளார்.
மேலும், கோவையில் கல்லூரி மாணவர் விடுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களும் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மாணவர் விடுதிகள் வரை கஞ்சா விற்பனை ஊடுருவியிருப்பது போதைப்பொருள் எவ்வளவு ஆழமாக தமிழகத்தில் பரவியுள்ளது என்பதற்கான நேரடி சாட்சி என்றும் அவர் கூறியுள்ளார்.
கல்வி வளாகங்களே பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும்போது, கஞ்சா புழக்கம் இல்லை என பேசுவது பொதுமக்களுக்கு செய்யும் துரோகம் என குறிப்பிட்ட அண்ணாமலை, கஞ்சா விற்பனை மற்றும் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் திமுக அரசு உண்மையை மறைத்து தப்பிக்க முயல்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
போதைப்பொருள் பிரச்சினை சட்டம்–ஒழுங்கு சிக்கல் மட்டுமல்ல; அது தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் சமூகப் பேரழிவு என்றும், கஞ்சா கடத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காமல், முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் முயல்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
