ஓட்டு வங்கிக்காக வங்கதேசத்தினரை நம் நாட்டில் குடியேற்ற காங்., துடிக்கிறது: பிரதமர் குற்றச்சாட்டு
நம்ருப்:
சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழையும் வங்கதேச குடியேறிகளை இந்தியாவில் குடியேற்ற காங்கிரஸ் உதவி செய்து வருவதாகவும், ஓட்டு வங்கி அரசியலுக்காக தேசவிரோத நடவடிக்கைகளில் அந்தக் கட்சி ஈடுபடுகிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக குற்றஞ்சாட்டினார்.
வடகிழக்கு மாநிலமான அசாமின் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள நம்ருப் பகுதியில் ரூ.10,601 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட உரத் தொழிற்சாலையை நேற்று பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், அசாமின் காடுகள் மற்றும் நிலப்பகுதிகளில் சட்டவிரோதமாக நுழையும் வங்கதேச மக்களை குடியேற்ற காங்கிரஸ் ஆர்வமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். ஓட்டு வங்கியை பலப்படுத்துவதே அந்தக் கட்சியின் ஒரே நோக்கம் என்றும், சொந்த நாட்டின் மக்கள்மீது அக்கட்சிக்கு அக்கறை இல்லை என்றும் அவர் விமர்சித்தார்.
சட்டவிரோத வங்கதேச குடியேறிகளுக்கு உதவுவதன் மூலம் காங்கிரஸ் தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என கூறிய பிரதமர், எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை காங்கிரஸ் எதிர்ப்பதற்கு அதிகாரமும் பதவியும் மீதான ஆசையே காரணம் என குற்றம்சாட்டினார். பாஜ மேற்கொள்ளும் நல்ல விஷயங்களை எல்லாம் காங்கிரஸ் தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும் அவர் கூறினார்.
அசாம் மாநில மக்களின் அடையாளம், நிலம் மற்றும் கவுரவத்தை பாதுகாக்க பாஜ அரசு எப்போதும் உழைக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்த மண்ணின் மைந்தரான இசையமைப்பாளர் பூபென் ஹஸாரிகாவுக்கு பாஜ அரசு ‘பாரத ரத்னா’ விருது வழங்கியதற்கும் காங்கிரஸ் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்ததை அவர் நினைவூட்டினார். பாடகர்கள் மற்றும் நடனக் கலைஞர்களுக்கு மோடி அரசு பாரத ரத்னா வழங்குகிறது என காங்கிரஸ் ஏளனமாக பேசியதாகவும் அவர் கூறினார்.
விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்கவோ, உரத் தொழிற்சாலைகளை நவீனப்படுத்தவோ காங்கிரஸ் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், ஆனால் பாஜ அரசு விவசாயிகளின் தேவைகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் நிறைவேற்றி வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மாணவர்களுடன் உரையாடிய மோடி
அசாமில் நதி சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில், பிரதமர் மோடி பிரம்மபுத்ரா நதியில் மாணவர்களுடன் கப்பலில் பயணம் செய்தார். ‘பள்ளி தேர்வுக்கான விவாதம்’ என்ற திட்டத்தின் கீழ் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. மூன்று அடுக்குகள் கொண்ட கப்பலில் 25 மாணவர்களுடன் பயணித்துக் கொண்டே அவர் உரையாற்றினார்.
பிரதமரின் இந்த பயணத்தையொட்டி, நதி கரையோர பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறுகையில், கடந்த ஆண்டு பிரதமர் மோடி கசிரங்கா சரணாலயத்திற்கு வந்தபின் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாக தெரிவித்தார். தற்போது பிரம்மபுத்ரா நதியில் கப்பல் மூலம் அவர் பயணித்துள்ளதால், இனி நதி சுற்றுலாவும் மேலும் மேம்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
பள்ளி மாணவர்களிடையே உள்ள தேர்வு பயத்தை குறைக்கும் நோக்கில், ‘பரிக்ஷா பே சர்ச்சா’ என்ற பெயரில் பிரதமர் மோடி 2018 முதல் தொடர்ந்து விவாதங்கள் நடத்தி வருகிறார்.
