ஓசூர்: பாலியல் சித்ரவதைக்கு ஆளானதாக கூறப்படும் இரண்டரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில், தாயின் தொடர்புடைய நபர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே ஜேசுராஜபுரம் பஞ்சாயத்து கவுண்டன்கொட்டாய் பகுதியில் வசிக்கும் 24 வயது பெண்ணுக்கு, இரண்டரை வயது பெண் குழந்தை இருந்தது.
கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்த அந்த பெண், கடந்த ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறி, அஞ்செட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் அஞ்செட்டி போலீசார் விசாரணை தொடங்கினர். உடற்கூறு ஆய்வு அறிக்கையில் குழந்தையின் உடலில் உள்காயங்கள் இருந்தது தெரியவந்தது.
மேலும் விசாரணையில், குழந்தை பாலியல் தொல்லைக்கு ஆளானதாகவும், அதனால் உடல்நலம் பாதித்து உயிரிழந்ததாகவும் தெரியவந்தது. இதையடுத்து பெரியநாயகம் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் தெரிவித்ததாவது:
இறந்த குழந்தையின் தாயுடன் ஜேசுராஜபுரம் கோம்மைகாடு கிராமத்தை சேர்ந்த தி.மு.க. இளைஞரணி கிளை செயலர் பெரியநாயகத்துக்கு தொடர்பு இருந்தது.
பெண் வீட்டில் இல்லாத நேரங்களில், பெரியநாயகம் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதனால் குழந்தை உடல்நலம் பாதித்து உயிரிழந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.
பெரியநாயகம் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்மீது குழந்தையின் உயிரிழப்புக்கு காரணமான வகையில் பாலியல் தொந்தரவு செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
