“ஒரு சிலரின் சுயநலத்தால் தமிழ்நாடு காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்கிறது” – ஜோதிமணி எம்.பி.
சென்னை: ஒரு சிலரின் சுயநல அரசியலால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மெதுவாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என, அக்கட்சியின் எம்.பி. ஜோதிமணி கவலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் நேரத்தில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரை வாக்குச் சாவடி முகவர் பட்டியலை தேர்தல் ஆணையத்துக்கு வழங்க விடாமல் தடுக்கும் நிலை காங்கிரஸ் கட்சியில் உருவாகியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸில் தற்போது நடைபெறும் நிகழ்வுகள் மிகுந்த வேதனையளிப்பதாகவும், கொள்கை நிலைப்பாடுகளும் அரசியல் செயல்பாடுகளும் திட்டமிட்டு நீர்த்துப் போகச் செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் தினமும் மக்கள் பிரச்சினைகள் அல்லாத தவறான காரணங்களுக்காகவே செய்திகளில் இடம்பெறுகிறது என்றும், இது கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் ஜோதிமணி தெரிவித்துள்ளார். மதவாத, பிரிவினைவாத மற்றும் வன்முறை சக்திகளிடமிருந்து தமிழ்நாடு இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய அபாயத்தை எதிர்நோக்கி இருப்பதாகவும், சமூக நீதி, சுயமரியாதை மற்றும் மக்கள் நல அரசியலை அழிக்க ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்தச் சூழலில், வரவிருக்கும் தேர்தலை அனைத்து அரசியல் கட்சிகளும் மிகக் கவனத்துடன் அணுக வேண்டிய நிலையில், காங்கிரஸ் கட்சி அந்தப் பொறுப்பை உணர்ந்துள்ளதா என்ற கேள்வி எழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத போதும், ஒவ்வொரு ஊரிலும் காங்கிரஸ் கொடியை பெருமையுடன் ஏந்தி நிற்கும் தொண்டர்களின் உணர்வுகளை கட்சி கைவிடக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு காங்கிரஸில் கட்டுப்பாடின்றி தொடரும் உட்கட்சிப் பிரச்சினைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துவதாக கூறிய ஜோதிமணி, சித்தாந்த அரசியலை வலுப்படுத்தாமல், மக்கள் பிரச்சினைகளைப் பேசாமல், வெறும் கூட்டல்–கழித்தல் அரசியலால் கட்சி பின்னடைவுக்குச் செல்லும் அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
மேலும், ராகுல் காந்தி முன்னெடுத்து வரும் தன்னலமற்ற, கொள்கைப் பிடிப்பு கொண்ட அரசியலுக்கு எதிரான பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் நகர்ந்து வருவதாகவும், அவரது உழைப்புக்கும் தியாகத்துக்கும் துரோகம் செய்யக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் அடையாளமும் மரியாதையும், காமராஜர் கட்டிக் காத்த பாரம்பரியத்துக்கும், நேரு–காந்தி குடும்பத்தின் தியாகத்துக்குமான தமிழ்நாட்டு மக்களின் அன்பு மற்றும் மரியாதையே என்பதையும் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார்.
