ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு தான் திமுக அரசின் மதநல்லிணக்கமா; நயினார் கேள்வி
திருப்பரங்குன்றம் சம்பவம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அந்த பதிவில், “ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு வைப்பது தான் திமுக அரசின் மதநல்லிணக்கமா?” என கேள்வி எழுப்பியுள்ளார். உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்ற அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அதே சமயம் அந்த மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு விழாவிற்கான கொடியேற்றத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கை திமுக அரசின் இந்துமத வெறுப்பை வெளிப்படுத்துவதாகவும், இது கடும் கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளார். இந்துக்களின் நம்பிக்கைகளை மட்டுமல்லாமல், தமிழர்களின் வழிபாட்டு உரிமைகளையே திட்டமிட்டு பறித்துள்ளது இந்த சம்பவம் மூலம் வெளிப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத்திய பாதுகாப்புப் படையினருடன் குறிப்பிட்ட சிலர் மட்டுமே மலைக்கு சென்று தீபமேற்றினால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கூறி, நீதிமன்ற உத்தரவை மீறி தடை விதித்த திமுக அரசின் துறை, அதே மலையில் உள்ள கல்லத்தி மரத்தில் சந்தனக்கூடு விழாவிற்காக கொடியேற்றம் நடத்த பாதுகாப்பு அளித்தது எப்படி என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
வாக்கு வங்கிக்காக திமுக தலைவர்கள் முன்னெடுக்கும் பிளவுவாத அரசியலில் அரசு அதிகாரிகளும் பங்குதாரர்களாக மாறிவிட்டனரா எனவும் அவர் விமர்சித்துள்ளார். இஸ்லாமியர்கள் தங்களது விழாக்களை கொண்டாடுவதில் இந்துக்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்றும், இந்துக்கள் திருப்பரங்குன்ற மலையில் தீபமேற்றுவதால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைதியாக நடைபெற வேண்டிய மத விழாக்களில் திமுக அரசு தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்துவது ஏன் என்றும், சகோதரத்துவத்துடன் பழகி வரும் இரு சமூகத்தினரிடையே மதக்கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கமா இதற்குப் பின்னால் உள்ளது என்றும் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் விமர்சித்துள்ளார்.
