டில்லியில் பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் சர்வதேச செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாநாட்டின் போது, இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்த இந்த நிகழ்வில் ஏற்பட்ட இந்த சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.
போராட்டக்காரர்கள் மாநாட்டு வளாகத்தில் நுழைந்து, இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். சிலர் தாங்கள் அணிந்திருந்த மேல்சட்டைகளை கழற்றிய நிலையில், பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் படங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டுகளை அணிந்திருந்தனர்.
எதிர்பாராத இந்த நடவடிக்கையால் மாநாட்டு பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தலையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை பாஜ கடுமையாக கண்டித்துள்ளது. இதுகுறித்து பாஜ தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் அமித் மாளவியா கூறுகையில், அரசியல் எதிர்ப்பு ஜனநாயக உரிமை என்றாலும், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டின் போது இத்தகைய நடவடிக்கை தேசிய அவமானம் என விமர்சித்தார்.
மேலும், உலகளவில் இந்தியாவின் மதிப்பை பாதிக்கும் வகையில் நடந்த இந்த செயல் கண்டிக்கத்தக்கது என்றும், காங்கிரஸ் இதற்கு வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
