புதுடில்லி: “எல்லாவற்றிலும் சிறந்தது மனித மூளை தான். செயற்கை நுண்ணறிவு மனித குலத்திற்கு ஒரு வெகுமதி. அதை தேவையான அளவுக்கு மட்டும் மனிதர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான என்.ஆர். நாராயணமூர்த்தி தெரிவித்தார்.
டில்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘லீடர்ஸ் டாக்’ நிகழ்ச்சியில் பல துறை வல்லுநர்கள் பேசி வருகின்றனர். இதில் பங்கேற்ற நாராயணமூர்த்தி கூறியதாவது: செயற்கை நுண்ணறிவு மனித குலத்திற்கு மிரட்டல் அல்ல; அது கற்றலுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. இளைஞர்களை மேலும் கற்க தூண்டுகிறது.
எதுவாக இருந்தாலும் மனித மூளைமே சிறந்தது. திறன் மற்றும் ஆற்றலில் மனித மூளையை செயற்கை நுண்ணறிவு மிஞ்ச முடியாது. இளைஞர்கள் இந்த நாட்டின் மிகப்பெரிய சொத்து. மனித உழைப்பும், மனித சிந்தனையும் எப்போதும் முதன்மை பெற வேண்டும். வருமானம், லாபம் ஆகியவை இரண்டாம் நிலை அம்சங்கள்.
இன்போசிஸ் நிறுவனத்தில் வெளிப்படையான கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன. தொழிலாளர்களின் திறனை மேம்படுத்த ஆறு மாத பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த பயிற்சியில் பெரும்பாலானோர் தேர்ச்சி பெறுகின்றனர்.
எனவே, மனித மூளை அனைத்திலும் சிறந்தது. எந்த காலத்திலும் செயற்கை நுண்ணறிவு மனித மூளையை முந்திச் செல்லாது என்பதை உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு நாராயணமூர்த்தி தெரிவித்தார்.
