புதுடில்லி: நாட்டில் போதிய அளவு எரிபொருள் கையிருப்பு இருப்பதாகவும், சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் கூட்டாக தாக்குதல் நடத்தி வருவதும், அதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருவதும் தொடர்கிறது. இந்த மோதலின் தாக்கமாக ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஆயில் டேங்கர் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பாவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் இந்தியாவிலும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படலாம் என்ற வகையில் சமூக ஊடகங்களில் பல்வேறு வதந்திகள் பரவத் தொடங்கின.
இந்த நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறியதாவது:
பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறை இருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை. இந்தியாவில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது. மேலும் சப்ளை மற்றும் விநியோக நெட்வொர்க்குகள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன.
எனவே பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை. எரிபொருள் நிலையங்களில் தேவையற்ற கூட்டம் சேர வேண்டாம். சரியான தகவல்களை அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் மூலம் மட்டுமே நம்ப வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
