எத்தியோப்பியா பார்லியில் பிரதமர் மோடி பேச்சு
அடிஸ் அபாபா:
எத்தியோப்பியாவும், தனது சொந்த மாநிலமான குஜராத்தும் சிங்கங்களின் தாயகமாக இருப்பதால், அங்கு இருப்பது வீட்டில் இருப்பதைப் போல உணர்த்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
எத்தியோப்பியா பார்லிமென்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய மக்களின் சார்பில் அங்கு பேசுவதற்கு கிடைத்த வாய்ப்பு பெருமை அளிப்பதாக கூறினார். சிங்கங்களின் பூமியாக விளங்கும் எத்தியோப்பியாவில் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், குஜராத்தும் சிங்கங்களின் தாயகமாக இருப்பதால், அங்கு தன்னை வீட்டிலேயே இருப்பது போல உணர்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவின் தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ மற்றும் எத்தியோப்பியாவின் தேசிய கீதம் ஆகிய இரண்டும் தாய்மண்ணை தாயாகக் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்க ஒற்றுமை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நட்பு – சகோதரத்துவம்
இந்த பாடல்கள் நமது பாரம்பரியம், கலாசாரம் மற்றும் அழகை பெருமைப்படுத்துவதுடன், தாயகத்தை பாதுகாக்கும் உணர்வையும் வளர்க்கின்றன என்றார். இன்று எத்தியோப்பியாவில் இந்திய நிறுவனங்கள் முக்கியமான வெளிநாட்டு முதலீட்டாளர்களாக திகழ்ந்து வருவதாகவும், 140 கோடி இந்திய மக்களின் சார்பில் நட்பு மற்றும் சகோதரத்துவ வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் மோடி கூறினார். எத்தியோப்பியாவின் உயரிய விருதை பெற்றது தனக்கு பெருமை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்
இந்திய மக்களின் சார்பில் அந்த விருதை பணிவுடனும் கூப்பிய கரங்களுடனும் ஏற்றுக்கொள்கிறேன் என கூறிய பிரதமர், இந்தியா – எத்தியோப்பியா இடையே வலுவான உறவுகள் நிலவுகின்றன என்றார். இந்த பார்லிமென்ட் வளாகத்தில் மக்களின் விருப்பம் சட்டங்களாக மாறுகிறது என்றும், அரசின் நோக்கமும் மக்களின் விருப்பத்துடன் இணங்கும்போது, திட்டங்களின் பயன் எளிதில் மக்களிடம் சென்று சேரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
