குன்னூர்: ராணுவத்தில் மேற்கொள்ளப்படும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இந்தியாவை எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வலிமையான நாடாக மாற்றும் என்று ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு நேற்று ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி வருகை தந்தார்.
அங்கு அதிகாரிகள் மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த முப்படை இளம் பயிற்சி அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: இந்திய ராணுவம் தற்போது மிக முக்கியமான சீர்திருத்த கட்டத்தை கடந்து வருகிறது. வெறும் ஆயுதங்கள் மட்டுமின்றி, ராணுவத்தின் கட்டமைப்பு மற்றும் போர் நடத்தும் முறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ராணுவத்தில் மேற்கொள்ளப்படும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இந்தியாவை எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட நாடாக மாற்றும்.
மேலும் முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் ‘தியேட்டரைசன்’ என்ற புதிய முன்னேற்றம், ராணுவத்தின் வலிமையை அதிகரிக்கும். வளர்ந்து வரும் ராணுவ ராஜதந்திரம் மற்றும் நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைகள் ராணுவத்தின் செயல்திறனை உயர்த்தும் நவீன மாற்றங்களாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.
பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சி அதிகாரிகளின் சிறந்த சேவையை பாராட்டி அவர்களுக்கு பாராட்டு அட்டைகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் மனீஷ் எரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
