மாஸ்கோ: எண்ணெய் வர்த்தக ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வது குறித்து இந்தியா, இதுவரை ரஷ்யாவுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கு டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், இந்திய பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த 25 சதவீத இறக்குமதி வரியை 18 சதவீதமாக குறைப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த இந்த வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதால், முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், எண்ணெய் வர்த்தக ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வது தொடர்பாக இந்தியா, தங்களுடன் இதுவரை எந்தவிதமான ஆலோசனையையும் மேற்கொள்ளவில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது:
இந்தியாவுடனான உறவை ரஷ்யா மதிக்கிறது. அதேபோல், இந்தியா–அமெரிக்கா உறவுகளையும் நாங்கள் மதிக்கிறோம். இருப்பினும், இது ஒரு முக்கியமான விவகாரம். எனவே, டில்லியுடனான எங்கள் உறவுகளை மேலும் வளர்க்கவே விரும்புகிறோம்.
அமெரிக்காவுடன் இந்தியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் குறித்து, இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலையும் அல்லது அறிக்கையையும் இந்தியாவிடம் இருந்து பெறவில்லை. இவ்வாறு டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
