“எங்களுக்கும் திருப்பி அடிக்கத் தெரியும்” – காங்கிரஸ் எம்பி காட்டம்
சென்னை:
மதுரை வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கோ.தளபதி, காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசியதற்கு, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் கடும் வார்த்தைகளில் பதிலடி கொடுத்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை வடக்கு தொகுதி தொடர்ந்து காங்கிரஸின் பலமான பகுதியாகவே இருந்து வருவதாக தெரிவித்தார்.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு, வரும் 13ம் தேதிக்கு பின்னர் தொகுதியில் பூத் கமிட்டி கூட்டம் நடத்தப்படும் என்றும், அப்போது காங்கிரஸின் அரசியல் பலம் வெளிப்படும் என்றும் அவர் கூறினார். காங்கிரஸை சும்மா பார்த்துவிட்டு போகலாம் என நினைக்க வேண்டாம் என்றும், “எங்களுக்கும் திருப்பி அடிக்கத் தெரியும்” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
தேர்தல் அறிவிப்பு, கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு முடிவுக்கு வரும் போது, மதுரை வடக்கு தொகுதியை காங்கிரஸ் கட்டாயம் கோரும் என்றும் மாணிக்கம் தாக்கூர் தெரிவித்தார். இதற்கிடையே, கூட்டணி அரசியலின் மாண்பை மீறி பொது மேடையில் காங்கிரஸ் கட்சியையும் அதன் எம்பிக்களையும் இழிவுபடுத்திப் பேசியதாக, திமுக எம்எல்ஏ கோ.தளபதி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கையை முதல்வர் ஏற்க வேண்டும் என காங்கிரஸ் காத்திருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அரசியல் ரீதியாக பதிலளிக்கப்படும் என்றும் மாணிக்கம் தாக்கூர் தெரிவித்துள்ளார். முன்னதாக, மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு பூத் கமிட்டி அமைக்க கூட ஆட்கள் இல்லை என திமுக எம்எல்ஏ தளபதி விமர்சித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
