மதுரவாயல்: வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் எங்கள் கூட்டணிக்கே மக்கள் ஆட்சி பொறுப்பை வழங்குவார்கள்; திமுக கூட்டணிக்கு பூஜ்ஜியம் தான் கிடைக்கும் என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார்.
மதுரவாயலில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் கருணைத் தொகை வழங்கப்படும் என அறிவித்ததை மீண்டும் வலியுறுத்தினார். அதற்கு முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்ததை குறிப்பிட்டு, தேர்தலில் மக்களே தகுந்த பதிலை அளிப்பார்கள் என்றார்.
திமுக அறிவித்த ரூ.5,000 திட்டத்தை விமர்சித்த அவர், விலைவாசி உயர்வு, சொத்துவரி மற்றும் மின்கட்டண உயர்வை எடுத்துக்காட்டினார். தற்போதைய ஆட்சியில் மக்கள் பொருளாதார சுமையை சந்தித்து வருவதாக குற்றம்சாட்டினார்.
திமுக ஆட்சி பல்வேறு திட்டங்களுக்கு பெயர் சூட்டுவதில் மட்டும் ஈடுபடுகிறது என்றும், நடைமுறையில் பலன்கள் குறைவாக உள்ளதாகவும் விமர்சித்தார். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த தேர்தல் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்கான தீர்மானமாக இருக்கும் என்றும், அதிமுக மக்கள் ஆதரவில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
