புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் உற்பத்தித் திறனை உயர்த்துவதற்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பார்லிமென்டில் பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், வளர்ச்சி வேகத்தை தக்க வைத்துக் கொள்வதற்கும், வேகமான வளர்ச்சியை உறுதி செய்யவும் பொருளாதாரத்திற்கு உந்துதல் அளிக்கும் வகையில் பாதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். கட்டமைப்பு சீர்திருத்தங்களுடன் கூடிய அமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படுவதாகவும், சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவித்தார். உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை உறுதி செய்யவும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
21-ம் நூற்றாண்டு முழுமையாக தொழில்நுட்பத்தால் இயக்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையில் தொழில்நுட்பம் கொண்டு வரப்படுவதை அரசு உறுதி செய்யும் என்றார். ஒரு நகரத்திற்கு ஆண்டுக்கு ரூ.1,000 கோடி வழங்கப்படுவதாகவும், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
செமி கண்டக்டர் திட்டத்தில் இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக கூறிய அவர், இவை அறிவுசார் சொத்துரிமை தொடர்பான அம்சங்களை மேம்படுத்தும் என்றார். ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான மின்னணு பாகங்கள் உற்பத்தித் திட்டம், மின்னணு துறையில் இந்தியா தற்சார்புநிலையை அடைய ஊக்கம் அளிக்கும் என்றும், இந்தியாவின் சொந்த தேவைகளை நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களால் பூர்த்தி செய்யும் நிலையை உருவாக்கும் என்றும் கூறினார்.
மேலும், அரிய வகை தனிமங்களுக்கான வழித்தடங்களை அமைப்பதையும் அரசு அறிவித்துள்ளதாக தெரிவித்தார். இந்த கனிமங்களை கண்டறிந்து கிடைக்கச் செய்வதன் மூலம், அரிய வகை தாதுக்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் நிலை குறையும் என்றும் அவர் கூறினார்.
இந்த திட்டங்கள் ஒடிசா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அமைய உள்ளதாகவும், இவை இந்திய பொருளாதாரத்தில் பலதரப்பட்ட நேர்மறை தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார். இதன் மூலம் காந்தங்கள் மற்றும் அரிய மண் தனிமங்களுக்கான சார்புநிலை குறைக்கப்படும் என்றார்.
மேலும், இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட நோய்களின் பட்டியலில் மேலும் 7 அரிய வகை நோய்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், நேரடி மற்றும் மறைமுக வரி தொடர்பாகவும் பல முன்மொழிவுகள் உள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
