வாஷிங்டன்: ஈரானில் அதிகார மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் என்னை அழைத்து வருகின்றனர். அந்த பொறுப்பை நான் ஏற்கத் தயாராக உள்ளேன் என்று அமெரிக்காவில் வசித்து வரும் ஈரானிய பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், கத்தார், குவைத், ஓமன், ஜோர்டான், ஈராக் மற்றும் சவுதி அரேபியா ஆகிய அண்டை நாடுகளை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டு வருகின்றன. இவ்வாறு அந்த நாடுகளின் இறையாண்மையை மீறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது கண்டிக்கத்தக்க செயல். இருப்பினும் இது புதிதான ஒன்று அல்ல; ஈரான் நீண்ட காலமாக இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துள்ளது.
பயங்கரவாத ஆட்சி
கடந்த ஐந்து தசாப்தங்களாக பயங்கரவாத ஆட்சி இந்த பிராந்தியத்தில் ரத்தக்களறியும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகிறது. ஆசாத்துக்கு ஆதரவு அளித்து சிரியாவை கல்லறையாக மாற்றியது. ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பை உருவாக்கி லெபனானை நாட்டுக்குள்ளேயே தனி அதிகார மையமாக மாற்றியது.
அதேபோல் அரேபிய தீபகற்பத்தில் ஸ்திரத்தன்மையை பாதிக்க ஹவுதிகளுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டன. ஈராக்கின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் அந்நாட்டில் உள்ள போராளிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. மேலும் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் பொருளாதார மையங்கள் தாக்கப்பட்டன.
இவை அனைத்தும் ஈரானிய மக்களின் விருப்பம் அல்ல. நாட்டை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆட்சியின் விருப்பம் தான். ஆனால் தற்போது அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கூட்டாளி
இன்று வரலாறு நமது எதிர்கால திறனை நமக்கு நினைவூட்டுகிறது. ஈரானிய புரட்சிக்கு முன்பு மன்னர் பைசல், ஷேக் சயீத், மன்னர் ஹூசைன் மற்றும் அதிபர் சதாத் உள்ளிட்ட அரபு தலைவர்களுடன் ஈரான் நெருக்கமாக பணியாற்றியது.
ஓமனில் நடந்த புரட்சியிலிருந்து மன்னர் கபூஸ் தனது நாட்டை பாதுகாக்க என் தந்தை உதவினார். அந்த காலத்தில் நாம் உண்மையான கூட்டாளிகளாக இருந்தோம். மீண்டும் அந்த நிலையை உருவாக்க முடியும்.
அதனால் அரபு உலகில் உள்ள நமது நண்பர்கள் அனைவரும் எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். எங்கள் இடைக்கால அரசை அங்கீகரித்து அதில் ஈடுபட தயாராக இருக்க வேண்டும் என்று ரெசா பஹ்லவி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
