பீஜிங்: ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிடக் கூடாது என்று இஸ்ரேலுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரானுக்கு யார் தலைவராக வந்தாலும் அவர்கள் கொல்லப்படுவார்கள் என்று இஸ்ரேலும் அமெரிக்காவும் எச்சரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த நிலையில் சீனா இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறியதாவது:
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியை குறிவைக்கும் எந்த நடவடிக்கையையும் சீனா எதிர்க்கிறது. ஈரானின் தலைமை மாற்றம் அந்த நாட்டின் உள்நாட்டு விவகாரம். அது ஈரானின் அரசியலமைப்பின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு.
எந்த காரணத்தையும் கூறி ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிடுவதை சீனா ஏற்காது. ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் எச்சரிக்கைகளுக்கு மத்தியில் சீனாவின் இந்த நிலைப்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேற்காசியாவில் நடைபெறும் பிரச்சினைகளை அப்பகுதி நாடுகளே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று சீனா வலியுறுத்தி வருகிறது.
மேலும் அமெரிக்காவின் தடைகளுக்கு மத்தியிலும் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் பெரும்பகுதியை சீனா வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
