டாக்கா: எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வங்கதேசத்தில் நுகர்வோர்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் போர் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா நாடுகளில் நிலவி வரும் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த போரின் தாக்கம் உலக நாடுகளை மெல்ல பாதித்து வரும் நிலையில், வங்கதேசத்தில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் வினியோகத்திற்கு புதிய கட்டுப்பாடுகளை வங்கதேச பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.
மேலும் எந்த வகை வாகனங்களுக்கு எவ்வளவு பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படும் என்பதற்கான அளவுகோலும் நிர்ணயிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இருசக்கர வாகனங்களுக்கு அதிகபட்சம் 2 லிட்டர் எரிபொருள், தனியார் கார்களுக்கு 10 லிட்டர், எஸ்யூவி வகை கார்கள், ஜீப்கள் மற்றும் மினி பஸ்களுக்கு 20 முதல் 25 லிட்டர் வரை எரிபொருள் வழங்கப்படும்.
பிக்அப் வேன்கள் மற்றும் உள்ளூர் பஸ்களுக்கு 70 முதல் 80 லிட்டர் வரை எரிபொருள் வழங்கப்படும். தொலைதூரம் செல்லும் லாரிகள் மற்றும் டிரக்குகளுக்கு 200 முதல் 220 லிட்டர் வரை எரிபொருள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில் எரிபொருள் விலையை உயர்த்தப்படாது என்றும், இந்த சூழ்நிலையை காரணமாக காட்டி கூடுதல் விலைக்கு எரிபொருளை விற்கக்கூடாது என்றும் வங்கதேச பெட்ரோலியம் கார்ப்பரேஷன் எச்சரித்துள்ளது.
