சென்னை: ஒரே நேரத்தில் இரு உயிர்களைப் பலிகொடுத்த திமுகவினரை மனிதாபிமானம் மிக்க தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே அதிவேகமாக சென்ற திமுக கொடி கட்டிய கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நெஞ்சை கனக்கச் செய்கிறது.
திமுக குண்டர்களின் அட்டூழியத்தால் ஒரே நேரத்தில் இரு உயிர்களை இழந்து தவிக்கும் அந்த குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்லி தேற்றுவது என்று தெரியவில்லை.
“திமுககாரன்” என்ற போர்வையில் உடன்பிறப்புகள் செய்து வரும் அராஜகங்கள் அளவின்றி தொடர்வது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்லாமல் பெரும் ஆபத்தானதுமாக உள்ளது.
ஆட்சி முடிவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அதிகார மமதையில் திமுகவினர் இன்னும் எத்தனை பேரின் உயிரை பறிப்பார்கள் என்ற அச்சத்தில் தமிழக மக்கள் ஒவ்வொரு நாளையும் கழித்து வருகின்றனர்.
அத்தனை அகலமான தார் சாலையில் ஓரமாகச் சென்று கொண்டிருந்தவர்களின் மீது காரை மோதும் அளவிற்கு திமுகவினருக்கு துணிச்சலும் அலட்சியமும் அதிகமாக உள்ளது என்பது அருவருப்பானதாகும்.
பல கனவுகளை சுமந்து கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணையும், இன்னும் சில நாட்களில் பிறக்க இருந்த இளம் சிசுவையும் ஒரே நேரத்தில் உயிரிழக்கச் செய்த திமுகவினரை மனிதாபிமானம் மிக்க தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
