இந்தோனேஷியாவில் 100 ஆண்டு பழைய சட்டங்கள் நீக்கம்; புதிய தண்டனைச் சட்டங்கள் அமல்
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில், 100 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த டச்சு காலனித்துவ கால தண்டனைச் சட்டங்கள் நீக்கப்பட்டு, புதிய தண்டனைச் சட்டங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
1918ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்த டச்சு காலனித்துவ சட்டங்கள், 1945ல் இந்தோனேஷியா விடுதலை பெற்ற பின்னரும் 80 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வந்தன. காலாவதியானவை என விமர்சிக்கப்பட்ட இந்தச் சட்டங்களுக்கு மாற்றாக, நாட்டின் சொந்த கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை அடிப்படையாக கொண்டு, தற்போதைய கால கட்டத்துக்கு ஏற்ற புதிய தண்டனைச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
புதிய சட்டங்களின்படி, திருமணத்திற்கு புறம்பான உடலுறவு குற்றமாக அறிவிக்கப்பட்டு, அதற்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருமணமின்றி ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் ‘லிவிங் டு கெதர்’ நடைமுறைக்கும் தடை விதிக்கப்பட்டு, இதற்கு ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு குற்றங்களுக்கும், சம்பந்தப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்கள் — கணவன் அல்லது மனைவி, பெற்றோர் அல்லது பிள்ளைகள் — புகார் அளித்தால் மட்டுமே சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் அதிபர், துணை அதிபர் அல்லது அரசு நிறுவனங்களை அவதூறு செய்வது தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
முக்கிய திருத்தமாக, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு 10 ஆண்டுகள் ‘நன்னடத்தை காலம்’ வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் குற்றவாளியின் நடத்தை திருப்திகரமாக இருந்தால், மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படும்.
இந்த புதிய தண்டனைச் சட்டங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், பேச்சு சுதந்திரம் மற்றும் தனிமனித உரிமைகள் பாதிக்கப்படும் என மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. குறிப்பாக, சிறுபான்மையினர் மற்றும் ஊடகவியலாளர்கள் ஒடுக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
