புதுடில்லி:
அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் மசோதா பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, “இந்தியாவில் முதலீடு செய்யவும், புதிய முயற்சிகளை தொடங்கவும், கட்டமைப்புகளை உருவாக்கவும் இதுவே சரியான காலம்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டில் இருந்த அணுசக்தி துறையில், தனியார் பங்களிப்பை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதற்காக உருவாக்கப்பட்ட ‘இந்தியாவின் மாற்றத்துக்கான அணுசக்தி மேம்பாட்டு மசோதா (Shanti)’ லோக்சபாவில் நேற்று விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, இந்த மசோதா இன்று (டிச.,19) ராஜ்யசபாவிலும் அனுமதி பெற்றது.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், பார்லிமென்டின் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது, நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார். மசோதாவுக்கு ஆதரவு அளித்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
மேலும், செயற்கை நுண்ணறிவுக்கு தேவையான பாதுகாப்பான ஆற்றலை வழங்குவதிலிருந்து, பசுமை உற்பத்தியை ஊக்குவிப்பது வரை, இந்த சட்டம் இந்தியாவுக்கும் உலகிற்கும் தூய்மையான எரிசக்தி வளர்ச்சிக்கு துணை புரியும் என கூறினார். அணுசக்தி துறையில் தனியார் பங்களிப்பு மூலம், இளைஞர்களுக்கும் தொழில் துறைக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
