‘இந்தியாவில் உருவாகி உலகை அடைய வேண்டும்’ – ஏஐ குறித்து பிரதமர் மோடி
புதுடில்லி:
இந்தியாவுக்கே உரிய தனித்துவமான செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளை உருவாக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
டில்லியில் உள்ள தனது இல்லத்தில், ஏஐ துறையில் செயல்படும் 12 ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிறுவனர் குழுவுடன் பிரதமர் மோடி வட்ட மேஜை கலந்துரையாடலில் பங்கேற்றார். அடுத்த மாதம் டில்லியில் நடைபெறவுள்ள AI for ALL: Global Impact Challenge போட்டிக்கு தகுதி பெற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டன.
இந்த சந்திப்பின் போது, இந்தியாவில் உருவாகி வரும் செயற்கை நுண்ணறிவு சுற்றுச்சூழல் அமைப்பை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பாராட்டின. மேலும், ஏஐ கண்டுபிடிப்பு மற்றும் பயன்பாட்டுக்கான முக்கிய மையமாக இந்தியா உருவெடுத்து வருவதாகவும், இந்த துறையின் பரந்த எதிர்கால வாய்ப்புகள் குறித்தும் அவர்கள் எடுத்துரைத்தனர்.
இதற்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, ஏஐ சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றம் மிக முக்கியமானது என குறிப்பிட்டார். அடுத்த மாதம் இந்தியா ஏஐ தொடர்பான உச்சி மாநாட்டை நடத்தவுள்ள நிலையில், தொழில்நுட்பத் துறையில் உலகளாவிய பங்காற்ற இந்தியா தயாராகி வருவதாக அவர் கூறினார்.
“இந்தியாவில் தயாரிக்கப்பட்டது, உலகத்திற்காக தயாரிக்கப்பட்டது” என்ற எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில், இந்தியாவுக்கே உரிய தனித்துவமான ஏஐ மாதிரிகளை உலகிற்கு இந்தியா வழங்க வேண்டும் என்றும், இந்தியா மீதான உலக நம்பிக்கையே நாட்டின் மிகப்பெரிய பலம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும், இந்திய ஏஐ மாதிரிகள் நெறிமுறைசார்ந்தவையாகவும், பாரபட்சமற்றவையாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டவையாகவும், தரவு தனியுரிமையை அடிப்படையாகக் கொண்டவையாகவும் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்திய ஸ்டார்ட்அப்கள் உலகளாவிய தலைமையை நோக்கி செயல்பட வேண்டும் என்றும், உள்ளூர் மற்றும் பிராந்திய மொழிகளை ஊக்குவிக்கும் வகையில் ஏஐ மாதிரிகள் வடிவமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து சமூக ஊடகத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, இந்திய ஸ்டார்ட்அப் இளைஞர்களுடன் ஏஐ குறித்து நடந்த உரையாடல் மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாக தெரிவித்தார். மின் வணிகம், சந்தைப்படுத்தல், பொறியியல் உருவகப்படுத்தல், பொருள் ஆராய்ச்சி, சுகாதாரம், மருத்துவ ஆய்வு உள்ளிட்ட பல துறைகளில் இந்த ஸ்டார்ட்அப்கள் செயல்பட்டு வருவது பாராட்டத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் இணையமைச்சர் ஜிதின் பிரசாதா ஆகியோரும் உடனிருந்தனர்.
