பெர்லின்: இந்தியாவில் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் பேர் ஜெர்மன் மொழியை கற்றுவருவதாக ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ் பெருமிதத்துடன் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஜனவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ் இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக வந்தார். அந்த சுற்றுப்பயணம் முடிவடைந்ததை தொடர்ந்து, இந்தியா–ஜெர்மனி கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ஜெர்மனி வழியாக பிற நாடுகளுக்கு விமானம் மூலம் பயணிக்கும் இந்தியர்களுக்கு ஜெர்மனி விசா தேவையில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.
சுற்றுப்பயணம் முடிந்த பின்னர், பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ் தமது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இந்தியாவில் இரண்டரை லட்சம் பேர் ஜெர்மன் மொழியை கற்றுவருவதாக தெரிவித்தார். மேலும், அதிக அளவில் ஜெர்மனி விசாக்களை வழங்கும் நகரமாக பெங்களூரு விளங்குகிறது; இதுபோன்று உலகில் வேறு எந்த நகரமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மொழி, வேலை மற்றும் கருத்து பரிமாற்றங்கள் மக்களை ஒன்றிணைக்கின்றன என்றும், இது இரு நாடுகளின் பொருளாதாரங்களுக்கும் பயனளிக்கும் வாய்ப்பாகவும், இந்தியா–ஜெர்மனி நாடுகளின் நலன்களுக்கு சேவை செய்யும் ஒன்றாகவும் இருக்கும் என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
