புதுடில்லி: இந்தியா–இஸ்ரேல் இடையிலான உறவு வலுவாக வளர்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில், இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி டில்லியில் இருந்து இஸ்ரேலுக்கு புறப்பட்டு சென்றார்.
இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாக, பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறிப்பிடப்பட்டுள்ளது. நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதும் முக்கிய அம்சமாக உள்ளது.
2017ஆம் ஆண்டு இஸ்ரேல் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றிருந்தார். அதன் பின்னர் இடைவெளிக்குப் பிறகு நடைபெறும் இந்த பயணம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இஸ்ரேல் பார்லிமென்டில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாகவும், பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்து இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
பயணம் குறித்து வெளியிட்டுள்ள பதிவில், இந்தியா–இஸ்ரேல் உறவு சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக மோடி குறிப்பிட்டார். நெதன்யாகுவுடன் நடைபெறும் கலந்துரையாடல்களை எதிர்நோக்குவதாகவும், இந்திய புலம்பெயர்ந்தோருடன் சந்திப்பு நடைபெறும் என்றும் தெரிவித்தார். இந்த பயணம் இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்தும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்.
